நகர்ப்புற சரக்கு போக்குவரத்தில் ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மூலம் அடுத்தகட்ட புரட்சி

நகர்ப்புற சரக்கு போக்குவரத்தில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மூலம் அடுத்தகட்ட புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிவிடாஸ் கன்சல்டன்சி நிறுவன மூத்த ஆய்வாளர் லட்சுமி ராமமூர்த்தி தெரிவித்தார்.
Auto
Auto
Published on

அவர் மேலும் கூறியதாவது:-

ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மூலம் புரட்சி

ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மூலம், நகர்ப்புற சரக்கு போக்குவரத்து துறையில் ஒரு அடுத்தகட்ட புரட்சியை சென்னையால் நிகழ்த்த முடியும். இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சென்னை, இன்றும் நாட்டின் வாகன உற்பத்தி மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தியில் 30 சதவீதத்தையும், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் 35 சதவீதத்தையும் சென்னை தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.

தமிழகம் தன்னை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முயற்சிக்கும் இந்த வேளையில், வெறும் பிரமாண்டமான உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே அடுத்தகட்ட வெற்றியை எட்டிவிட முடியாது. மாறாக, நகரத்தின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல், சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் சவாலுக்கு ஒரு தீர்வை உருவாக்குவதில்தான் சென்னையின் அடுத்த புரட்சி அடங்கியுள்ளது.

சென்னையின் சரக்கு போக்குவரத்து துறை வளர்ச்சி கண்டுவருகிறது.

சிறந்த நெடுஞ்சாலை இணைப்பு

சென்னையின் சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில் துறை வளர்ச்சி இன்று உலகத்தையே வியக்க வைக்கும் வகையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்திய ஒரு ஆய்வின்படி, 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, சென்னையின் ஏ கிரேடு கிடங்கு வசதிகள் முந்தைய ஆண்டை விட 135% வளர்ச்சியை எட்டி, சுமார் 4.1 மில்லியன் சதுர அடியாக உயர்ந்துள்ளது. இதற்கு இங்கிருக்கும் ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் துறைகள், துறைமுகங்கள் மற்றும் சிறந்த நெடுஞ்சாலை இணைப்புகளே பெரும் சக்திகளாக விளங்குகின்றன.

நகர்ப்புற சரக்கு போக்குவரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME)சந்திக்கும் சவால்களும் இருக்கின்றன. ஜூலை 1, 2020 முதல் ஆகஸ்ட் 8, 2024 வரையிலான உதயம் மற்றும் UAPபுள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டின் தொழில் துறை கட்டமைப்பின் உயிர்நாடியாக 4,59,102 பதிவுசெய்யப்பட்ட MSME நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் ஒரு பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றன.

நெரிசல் - காற்று மாசுபாடு

நகரின் முக்கியச் சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் பயணிக்கும் இன்றைய சூழலில், 'வேன்' போன்ற பாரம்பரியப் போக்குவரத்து வாகனங்களையே தொடர்ந்து நம்பியிருப்பது இனி சாத்தியமில்லை. போக்குவரத்து நெரிசல், போதிய பார்க்கிங் வசதி இல்லாமை மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால், சென்னையின் குறுகலான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெரிய ரகச் சரக்கு வாகனங்களைப் பயன்படுத்துவது லாபகரமானதாக இல்லை.

இந்திய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து குளறுபடிகளால் மட்டுமே, மொத்த வினியோகச் செலவில் சுமார் 30% முதல் 35% வரை போக்குவரத்துக்காகவே செலவிடப்படுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (CSE) மதிப்பிட்டுள்ளது. சென்னையில் நீண்டகாலமாக இருந்து வரும் இந்த நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமானால், நவீனமான, சிறிய அளவிலான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தீர்வுகளை நாம் நாட வேண்டும். அத்தகைய ஒரு சிறந்த தீர்வு, நம் கண் முன்னால் ஆனால் நம் கவனத்திற்கு வராமல் சென்னையில் காத்துக்கொண்டிருக்கிறது.

இரட்டைப் பயன்பாட்டு ஆட்டோ

சென்னை மாநகரப் பகுதியில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இயங்கி வருகின்றன; இந்த ஆட்டோ ரிக்‌ஷாக்கள் நகரின் போக்குவரத்து அமைப்பிற்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றன. தற்போது வணிகம் மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியை முன்னிட்டு, பொருட்களை விரைவாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமலும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பயணிகளையும் ஏற்றிச் சென்று, அதே சமயம் சிறிய அளவிலான சரக்குகளையும் கையாளக்கூடிய இரட்டைப் பயன்பாட்டு ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. தற்போது TIDCO தயாரித்து வரும் 'சென்னை நகர சரக்கு போக்குவரத்துத் திட்டத்தில் இந்த இரட்டைப் பயன்பாட்டு ஆட்டோக்களை ஒருங்கிணைப்பது ஒரு முன்னோடித் திட்டமாக அமையும்.

இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, ஒரு நிலையான போக்குவரத்து மாற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த ஆட்டோ ரிக்‌ஷாக்கள் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகளுக்காகவும், மற்ற நேரங்களில் சரக்கு போக்குவரத்திற்காகவும் தங்களை மாற்றிக்கொண்டு இயங்க முடியும். இதன் மூலம் அந்த வாகனங்கள் ஒரு நாள் முழுவதும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இவை சிறிய ரகச் சரக்குகளைக் (150 கிலோ வரை) கையாளும் திறன் கொண்டவை என்பதால், நகரத்திற்குள் பொருட்களை வினியோகம் செய்யும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு (MSME)இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

காலத்திற்கேற்ற கட்டண முறை

இந்த இரட்டைப் பயன்பாட்டு முறை, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல நன்மைகளைத் தரக்கூடியது. இது ஆட்டோ ஓட்டுனர்களுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டித் தருவதோடு, பயணிகள் வரத்து குறைவாக இருக்கும் நேரங்களில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் வருவாயைச் சீராக வைத்திருக்கப் பெரிதும் உதவும். மேலும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்றைய நவீன சரக்கு போக்குவரத்துத் துறையில், ஆட்டோ ஓட்டுனர்களும் ஒரு அங்கமாக மாறுவதற்கு இது வழிவகுக்கும்.

சிவிடாஸ் கன்சல்டன்சி நிறுவனம் சென்னை ஆட்டோ ரிக்‌ஷாக்கள் குறித்து நடத்திய ஆய்வறிக்கையின்படி, 10-ல் 7 ஓட்டுனநர்கள் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துதான் ஓட்டுகிறார்கள். மீதமுள்ள 3 பேரும் ஆட்டோ வாங்குவதற்காக முறைசாரா கடன்களையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள். இதுமட்டுமன்றி, காலத்திற்கேற்ற கட்டண முறையை அமல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதம், ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் பயணிகளையும் பாதிக்கிறது. பயணிகள் வரத்து குறைவாக இருக்கும் நேரங்களில், ஆட்டோ ஓட்டுனர்கள் சரக்கு போக்குவரத்திற்கு மாறக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், அவர்களின் வாகனப் பயன்பாட்டுத் திறனும் வருமானமும் கணிசமாக உயரும்.

நவீன கண்டுபிடிப்புக்கான அடையாளம்

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், அதற்குத் தேவையான சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே முதல் படியாகும். ஆட்டோ ரிக்‌ஷாக்கள் எவ்வளவு எடையைச் சுமக்கலாம் என்பதற்கான 'வகை ஒப்புதல் சான்றிதழ்களை' நாம் மாற்றியமைக்க வேண்டும்; இதன் மூலம் 250 கிலோ வரை சரக்குகளை ஏற்றிச் செல்ல சட்டப்படி அனுமதி வழங்கலாம். இதோடு கூடவே, பிரிவு 66 மற்றும் விதி 72 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சில தளர்வுகளையும் விலக்குகளையும் அளிப்பது அவசியம். இத்தகைய மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஒரே ஆட்டோவில் பயணிகளையும் ஏற்றிச் செல்லலாம், தேவையென்றால் சரக்குகளையும் கொண்டு செல்லலாம் என்ற நிலை உருவாகும். இது ஆட்டோக்களை இயக்குவதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை நீக்கி, ஓட்டுநர்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்கள் தொழிலைத் தங்குதடையின்றி மாற்றிக்கொள்ள வழிவகுக்கும்.

சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பில் இந்த இரட்டைப் பயன்பாட்டு ஆட்டோக்களை ஒரு அங்கமாக ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் தினசரி கடந்து செல்லும் ஒரு சாதாரண வாகனத்தை, இந்த நகரத்தின் நவீன கண்டுபிடிப்பிற்கான அடையாளமாக மாற்ற முடியும், என சிவிடாஸ் கன்சல்டன்சி நிறுவன மூத்த ஆய்வாளர் லட்சுமி ராமமூர்த்தி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com