

குலசேகரன்பட்டினம்,
என்னை பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசிப்பதாக திருச்செந்தூர் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆழ்வை ஒன்றியத்திற்குட்பட்ட வரண்டியல் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை பல்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் என்னை தங்களது குடும்பத்தில் ஒருவராக நேசிக்கின்றனர்.
சிலர் தேர்தலுக்கு மட்டும் வருவார்கள் தேர்தல் முடிந்தவுடன் சென்று விடுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் எப்போது சென்றாலும் ஆட்கள் இருப்பார்கள்.
உங்களது கோரிக்கையை கொடுத்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். தண்டுபத்திலும் ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்துள்ளேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற நேரம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட செயல்பட்டு அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கினார். இதுபோன்ற இயற்கை பேரிடர் ஏற்படும்போது ஏராளமானவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கினர். கடந்த தேர்தலில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தவுடன், இது எப்படி வழங்க முடியும் என கேலி-கிண்டல் செய்தனர்.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1000 வழங்கி சாதனை படைத்தார். பள்ளி மாணவர்ளுக்கு காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்துள்ளார்.
விடியல் பயணம் திட்டத்தினால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என அறிவித்திருப்பதனால் நான் ஒட்டு கேட்க செல்லும் இடமெல்லாம் பெண்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரிமை தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கபடும். ரூ.2,756 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 9.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது. இதுபோன்று மக்கள் நலத்திட்டங்கள் தொடர எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.