

அரியலூர்,
வீடுகள் இடிப்பு
அரியலூர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவையடுத்து ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி அரியலூரில் குறிஞ்சி ஏரி, அரசு நிலையிட்டான் ஏரி கரைகளில் இருந்த 124 வீடுகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டன.
குடிசை வீடு முதல் அடுக்குமாடி கட்டிடங்கள் வரை அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அதன் பிறகு கரைகளை உயர்த்தவும், ஏரியை ஆழப்படுத்தவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மீண்டும் ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் அரியலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள இருசு குட்டையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கரையில் இருந்த குடிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். அதன்பின்னர் கரைகள் உயர்த்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்படாத நிலையில் இருந்தன. தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் கரையை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கரையின் சாலையோரம் இருந்த மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் சிறிய கடைகள் வைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கியுள்ளனர். இதேபோன்று சித்தேரியின் கரையில் 15 அடி அளவிற்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரைகள் உடைந்து போகாமல் இருப்பதற்கு வைக்கப்பட்டிருந்த கருங்கல் தடுப்புகள் முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன. ஒருபுறம் ஏரிக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள் மறுபுறம் ஆக்கிரமிப்புகள் செய்வதற்கு இடம் கொடுக்கும் வகையில் ஏரிக்கரையை குறைத்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.