ஜாமீன் கிடைத்து வீடு திரும்பிய நவாப் மாலிக்குடன் அஜித் பவார் அணியினர் சந்திப்பு

ஜாமீன் கிடைத்து வீடு திரும்பிய நவாப் மாலிக்கை அஜித் பவார் அணியினர் சந்தித்து பேசினர்.
ஜாமீன் கிடைத்து வீடு திரும்பிய நவாப் மாலிக்குடன் அஜித் பவார் அணியினர் சந்திப்பு
Published on

மும்பை, 

ஜாமீன் கிடைத்து வீடு திரும்பிய நவாப் மாலிக்கை அஜித் பவார் அணியினர் சந்தித்து பேசினர்.

வீடு திரும்பிய நவாப் மாலிக்

தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி நவாப் மாலிக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய சொத்துகளை வாங்கியதில் நடந்த பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். சுமார் 1 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டு 2 மாதம் ஜாமீன் வழங்கியது. உடல்நலக்குறைவு காரணமாக நவாப் மாலிக் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஜாமீன் கிடைத்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

அஜித்பவார் அணியினர் சந்திப்பு

இந்தநிலையில் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் அஜித்பவார் அணியை சேர்ந்த பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே ஆகியோர் நவாப் மாலிக்கை சந்தித்தனர். அவர்கள் நவாப் மாலிக்கிற்கு இனிப்பு ஊட்டினர். சந்திப்பு குறித்து பிரபுல் பட்டேல் கூறுகையில், "மரியாதை நிமித்தமாக நவாப் மாலிக்கை சந்தித்தோம். அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து எங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்தோம். அவர் 16 மாதங்கள் ஜெயிலில் இருந்து இருக்கிறார். எங்களுடன் அவர் 25-30 ஆண்டுகளாக பயணம் செய்கிறார். அவரை சந்திக்க வேண்டியது எங்களின் கடமை. நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. உடல் நலனை கருத்தில் கொண்டு நவாப் மாலிக்கிற்கு எல்லோரும் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவருக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது. அஜித்பவார் கண்டிப்பாக நவாப் மாலிக்கை சந்திப்பார்" என்றார். முன்னதாக நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் கிடைத்ததற்கு சரத்பவார் அணியை சேர்ந்த அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி. மகிழ்ச்சி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com