லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி டாக்டர் உள்பட 4 பேர் பலி- நோயாளியை அழைத்து சென்றபோது பரிதாபம்

நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் டாக்டர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி டாக்டர் உள்பட 4 பேர் பலி- நோயாளியை அழைத்து சென்றபோது பரிதாபம்
Published on

மும்பை, 

நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் டாக்டர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் இருந்து அகமதுநகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. நோயாளிக்கு உடனடியாக மேல் சிகிச்சை தேவைபட்டதால் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. ஆம்புலன்சில் நோயாளியுடன் டாக்டர், செவிலியர், டிரைவர் உள்பட 4 பேர் இருந்தனர்.

இரவு 9.30 மணியளவில் ஆம்புலன்ஸ் தமன்காவ்- அகமதுநகர் ரோட்டில் அம்போரா பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென இடது புறமாக திரும்பியது. இதன் காரணமாக கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வேகமாக வந்த ஆம்புலன்ஸ், லாரி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம் போல நொறுங்கியது.

டாக்டர் உள்பட 4 பேர் பலி

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டு இருந்த டாக்டர் மற்றும் மேலும் ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியானவர்கள் டாக்டர் ராஜேஸ் ஜின்சுர்கே(வயது35), ஆம்புலன்ஸ் டிரைவர் பாரத் லோகன்டே(35) மற்றும் மனோஜ், பப்பு ஆகியோர் என தெரியவந்தது. நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி டாக்டர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com