ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரம்-சி.பி.ஐ. விசாரணை தற்போதைக்கு தேவை இல்லை; நீதிபதிகள் கருத்து

ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தற்போதைக்கு தேவை இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி.
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி.
Published on

பெங்களூரு: ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தற்போதைக்கு தேவை இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆபாச வீடியோ

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி ஒருமுறை மட்டுமே விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். கொரோனாவை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

ஆனால் இந்த வழக்கில் ஆபாச வீடியோவில் இருந்ததாக கூறப்படும் இளம்பெண்ணிடம் பலமுறை போலீசார் விசாரித்து இருந்தனர்.

இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழு போலீசார், ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் ஆபாச வீடியோ வழக்கை சிறப்பு விசாரணை குழுவிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வக்கீல்கள் கீதா மிஸ்ரா, உமேஷ் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

தேவை இல்லை

அவர்களின் மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் அபய் ஒகா, சுரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு போலீசார் 3 அறிக்கைகளை தாக்கல் செய்து உள்ளனர். அந்த அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். அந்த அறிக்கைகளின்படி இதுவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதனால் ஆபாச வீடியோ வழக்கை தற்போதைக்கு சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக மே மாதம் 31-ந் தேதி அறிக்கையை சீல் வைத்த கவரில் வைத்து தாக்கல் செய்ய சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டு உள்ளோம். மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் 31-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

விசாரணைக்கு ஆஜராவார்

ஆபாச வீடியோ விவகாரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். ரமேஷ் ஜார்கிகோளி வீட்டு தனிமையில் இருப்பதால், அவரது சகோதரர் பாலசந்திர ஜார்கிகோளியிடம் அந்த நோட்டீசு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பெலகாவி மக்களவை தொகுதிக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில் அரபாவி டவுனில் பாலசந்திர ஜார்கிகோளி வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

எனது சகோதரர் ரமேஷ் ஜார்கிகோளி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மீண்டு வந்துள்ளார். டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டு தனிமையில் உள்ளார். ஆபாச வீடியோ விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருப்பது உண்மை தான். அந்த நோட்டீசை நான் தான் பெற்றிருந்தேன். வருகிற 20-ந் தேதி ஆஜராகும்படி போலீசார் கூறி இருப்பதால், அன்றைய தினம் அவர் ஆஜராவார். அதற்கு முன்பாக ரமேஷ் ஜார்கிகோளிக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்த பரிசோதனை அறிக்கையின்படியும், டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரிலும் அவர் விசாரணைக்கு ஆஜராவார். போலீஸ் விசாரணைக்கு இதுவரை ரமேஷ் ஜார்கிகோளி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இனியும் அவர் ஒத்துழைப்பு அளிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com