கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை
Published on

மைசூரு: கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றங்கரையோரத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் கர்நாடக அரசின் அறநிலைய துறைக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து முடிந்தது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் தேரோட்டத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததால், நஞ்சன்கூடு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் தேரோட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்களுக்கு தடை

இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. இது கொரோனா பரவலின் 2-வது அலை என கூறப்படுகிறது. மைசூருவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, கடந்த ஒரு மாதத்திற்கு நஞ்சுண்டேஸ்வரா கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், கோவில் மூடப்பட்டு வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவு 16-ந்தேதி (நேற்று முன்தினம்) அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றம்

இந்த நிலையில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதித்தது தெரியாமல் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்தனர். தடை விதிக்கப்பட்டது தெரிந்ததும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அதிருப்தியுடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com