கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மேலும் ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களோடு சேர்த்து இதையும் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சமஸ்தானத்துக்கு சொந்தமான நிலப்பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

மீன் வலைகளை உலர்த்தவும், சமையல் செய்யவும் கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். இதுபோன்ற சூழலில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாட்டு பிரதமர்களுக்கும் அதிகாரம் இல்லை.

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறாததால் இது செல்லுபடியாகாது. எனவே கச்சத்தீவை மீண்டும் நமது மத்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்த காலம் தற்போது மாறிவிட்டது. கச்சத்தீவை இலங்கை கப்பற்படை முழு கட்டுப்பாட்டில் வைத்து, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,500 மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சூழலில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2013, மே 3-ந் தேதி தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, 1974-ம் ஆண்டு கையெழுத்தான கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நிலுவை மனுக்களோடு இணைக்க உத்தரவு

இந்த மனுவை நீதிபதி ஹெமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி, 'ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றனர்' என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், 'இதே விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதே, அதை விசாரித்து தீர்ப்பு அளித்தால் போதாதா?' என வினவினர்.

இதற்கு வக்கீல் ஜெயசுகின், 'இந்த மனுவையும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவை ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைக்க உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com