தனி மாவட்டம் ஆனபிறகு உடுப்பி, உள்கட்டமைப்பு வசதிகளுடன் வேகமாக வளர்ந்துள்ளது; வெள்ளி விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு

தனி மாவட்டம் ஆனபிறகு உடுப்பி, உள்கட்டமைப்பு வசதிகளுடன் வேகமாக வளர்ந்துள்ளது என்று வெள்ளி விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசினார். தனி மாவட்டம் ஆனபிறகு உடுப்பி, உள்கட்டமைப்பு வசதிகளுடன் வேகமாக வளர்ந்துள்ளது என்று வெள்ளி விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசினார்.
தனி மாவட்டம் ஆனபிறகு உடுப்பி, உள்கட்டமைப்பு வசதிகளுடன் வேகமாக வளர்ந்துள்ளது; வெள்ளி விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
Published on

மங்களூரு;

உடுப்பி வெள்ளி விழா

கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்றுமுன்தினம் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

உடுப்பி மாவட்ட வெள்ளி விழாவில் கலந்துகொள்ள மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்றுமுன்தினம் கவர்னர் தாவர்சந்த் கெலாட், உடுப்பிக்கு தனி விமானம் மூலம் வந்தார். பின்னர் உடுப்பி டவுனில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த வெள்ளிவிழாவை தொடங்கி வைத்து மேடையில் உரையாற்றினார்.

உலக அளவில் அங்கீகாரம்

அப்போது கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:- உடுப்பியில் ஏராளமான கோவில்கள் இருப்பதால் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வந்து இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனி மாவட்டம் ஆன பிறகு உடுப்பி வேகமாக வளர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளும் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

அதுமட்டுமின்றி உடுப்பியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. கர்நாடகத்தில் சிறந்த மாவட்டங்களில் உடுப்பி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மத்வாச்சார்யா பகவான் கிருஷ்ணரை இங்கு வரவழைத்து அஷ்ட மடங்களுடன் ஒரு கோவிலையும் நிறுவினார்.

இங்குள்ள சிற்பங்கள் மற்றும் மரவேலைகள் வரலாற்று சின்னங்களாக ஜொலிக்கிறது. உடுப்பி நகரம் மாநிலம் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. ஏனெனில் உடுப்பி கலாசாரம், மதம் மற்றும் சமூகம் நிறைந்த மாவட்டமாகும்.

உடுப்பி மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உடுப்பியின் சுற்றுலா தலங்கள் வளர்ச்சிக்கு என்னால் ஏதாவது செய்ய முடிந்தால் நிச்சயமாக செய்வேன் என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

பேரணி

இந்த விழாவில் மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலாஜே, மந்திரிகள் எஸ். அங்கார், கோட்டா சீனிவாச பூஜாரி, சுனில்குமார், கலெக்டர் குர்மா ராவ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் வீரப்ப மொய்லி, குந்தாப்புரா தொகுதி எம்.எல்.ஏ. ஹலடி சீனிவாஸ் ஷெட்டி, எம்.எல்.சி., மஞ்சுநாத் பண்டாரி, உடுப்பி நகரசபைதலைவர் சுமித்ரா நாயக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் உடுப்பி மாவட்ட உருவாக்கத்திற்கு காரணமானவர்கள், சேவையாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.மேலும் உடுப்பி வெள்ளி விழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை ரகுபதி பட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

உடுப்பி தனியார் பஸ் நிலையம் அருகே உள்ள உயர்நிலை பள்ளியில் இருந்து பேரணி தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளில் சென்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com