ஆந்திர பிரதேசம்: 2023 ஏப்ரல் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு பணிகள் தொடங்கும் என தகவல்

ஆந்திர பிரதேசத்தில் வரும் 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அரசு பணிகளை தொடங்க உள்ளார்.

Update: 2022-11-29 07:52 GMT



விசாகப்பட்டினம்,


ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா தனியாக பிரிந்த பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் தலைநகராக விளங்கி வந்தது. இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 3 தலைநகர கோரிக்கை எழுந்தது.

எனினும், இது நடைமுறை சாத்தியமில்லை என ஆளும் அரசின் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் பின்பு கூறப்பட்டது. இந்த சூழலில், 6 மாதங்களுக்குள் அமராவதி தலைநகருக்கான வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை வழங்கி நிறைவு செய்யும்படி அரசுக்கு ஆந்திர பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கு எதிராக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்தது. நீங்கள் நகர திட்ட வடிவமைப்பாளரோ அல்லது பொறியியலாளரோ கிடையாது என கூறி ஐகோர்ட்டுக்கு கண்டனமும் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்ப மந்திரி குடிவாடா அமர்நாத் கூறும்போது, வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அரசு பணிகளை தொடங்க உள்ளார். விசாகப்பட்டினம் தலைநகர் என்ற முடிவு ஒரு சில சுயநல மனிதர்களால் எடுக்கப்படவில்லை.

அது மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களின் நோக்கம் என்று கூறியுள்ளார். விசாகப்பட்டினத்தில் போதிய அரசு அலுவலகங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் உள்ளன.

சுயநல நோக்கங்களுக்காக உள்ளடங்கிய, தொலைதூர பகுதிகளில் அமைவதற்கு பதிலாக, தலைநகரம் என்பது பல அம்சங்களை கொண்ட நகரில் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என மந்திரி அமர்நாத் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்