பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது - வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும், மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி வரக்கூடாது என்றும் பிரியங்கா வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது - வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை
Published on

உனா,

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தில் உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

அந்தவகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று மாநிலத்தில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

உனா மாவட்டத்தின் காங்கர் கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் வழிப்பறி செய்து வருகிறது. எந்த வளமும் மாநிலத்தில் மீதமில்லை, அனைத்தும் பெரிய தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.எனவே பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வண்டும். மீண்டும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் பா.ஜனதாவுக்கு ஓட்டளித்து தவறிழைத்தால், பின்னர் வருந்த நேரிடும்.

இமாச்சல பிரதேசத்தை நலிந்த மாநிலம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால் இது அனைத்தும் வாக்குகளை பெறுவதற்கான நாடகமே. எந்த விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் ஒரே லட்சியம்.

ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போரை பா.ஜனதா மறந்து விடும். பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே அனைத்தும் வழங்கி வருகிறது.

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் கடந்த 5 ஆண்டுகளாக 63 ஆயிரம் காலியிடங்களை நிரப்பவில்லை. ஆனால் தற்போது ஆட்சிய தொடர்வதற்காக எதையும் கூறுவார்கள். எனவே அவர்களின் போலி வாக்குறுதிகளுக்கு இரையாகி விடாதீர்கள்.

காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது. கடந்த காலங்களில் மேற்கொண்ட அந்த பணிகள் தாடரும். எனவே மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். இந்த முறை யாருடைய ஆலோசனையை கேட்டும் வாக்களிக்காதீர்கள். நன்றாக யோசித்து சரியான நபர்களை தேர்ந்தெடுங்கள் என்று பிரியங்கா கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com