கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; தேர்தல் மாயாஜாலம் என காங்கிரஸ் விமர்சனம்

வடகர்நாடக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; தேர்தல் மாயாஜாலம் என காங்கிரஸ் விமர்சனம்
Published on

பெங்களூரு:

கலசா-பண்டூரி திட்டம்

மகதாயி நதிநீர் தொடர்பாக கர்நாடகம், கோவா, மராட்டியம் மாநிலங்கள் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் மகதாயி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்த தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இதில் கர்நாடகத்திற்கு 13 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி), கோவாவுக்கு 24 டி.எம்.சி., மராட்டியத்திற்கு 1.30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கோவா, கர்நாடக மாநிலங்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரில் 1.7 டி.எம்.சி. நீரை கலசா அணைக்கும், 2.18 டி.எம்.சி நீரை பண்டூரி அணைக்கும் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அரசு, மகதாயி நதியில் இருந்து தனக்கு ஒதுக்கப்பட்ட நீரை பயன்படுத்தும் நோக்கத்தில் கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியது. இந்த கோரிக்கையை மத்திய அரசு நீண்ட காலமாக கிடப்பில் போட்டு இருந்தது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் கலசா-பண்டூரி திட்டத்திற்கு மத்திய அரசின் ஜல் சக்தித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

இந்த தகவலை மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜல்சக்தித்துறை அனுமதி வழங்கிய உத்தரவையும் அதில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த உத்தரவு சுப்ரீம் கோட்டு தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலசா-பண்டூரி திட்டத்தின் கீழ் உப்பள்ளி-தார்வார், கதக், பெலகாவி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த திட்டத்தை அமல்படுத்த கோரி வட கர்நாடகத்தில் உள்ள நரகுந்து, நவலகுந்து பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நீண்ட காலமாக தீவிரமாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தால் சில நேரங்களில் வன்முறையும் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெங்களூருவிலும் போராட்டம் நடத்தினர். இறுதியாக இந்த கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேர்தல் மாயாஜாலம்

இதற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, கலசா-பண்டூரி திட்டத்திற்கு அனுமதி வழங்கி இருப்பது தேர்தல் மாயாஜாலம் என்று விமர்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com