சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: 4-வது முறையாக அம்ருத்பாலை காவலில் எடுத்த சி.ஐ.டி. போலீசார்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அம்ருத்பாலை 4-வது முறையாக சி.ஐ.டி. போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-11-22 21:49 GMT

பெங்களூரு:

போலீஸ் காவலில் அம்ருத்பால்

கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்த வழக்கில், ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலை, சி.ஐ.டி. போலீசார் கைது செய்து இருந்தனர். விசாரணையில் அவர் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு உதவியதுடன், இந்த முறைகேட்டிற்கு ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வாங்கியதும், ரூ.5 கோடிக்கு மேல் அவர் பணம் வாங்கியதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் அம்ருத்பால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை ஏற்கனவே 3 முறை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து இருந்தனர். இந்த நிலையில் 4-வது முறையாக அம்ருத்பாலை தங்களது காவலில் எடுத்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்ருத்பாலுக்கும், கைதாகி சிறையில் உள்ள ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாருக்கும் இடையிலான பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த அம்ருத்பாலை போலீசார் காவலில் எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைதாக வாய்ப்பு

இதற்கிடையே பணமோசடியில் ஈடுபட்டதாக அம்ருத்பால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெங்களூரு, பெங்களூரு புறநகர், பஞ்சாப்பில் உள்ள அம்ருத்பாலின் வீடுகள், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்து இருந்தது.

இந்த நிலையில் அம்ருத்பால் பணமோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் பணமோசடி வழக்கில் அம்ருத்பாலை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அம்ருத்பாலுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்