சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கிய வாலிபர் சுயநினைவை இழந்தார்

பெங்களூருவில் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கிய வாலிபர் சுயநினைவை இழந்த சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-11-05 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் சாலை பள்ளத்தால் விபத்தில் சிக்கிய வாலிபர் சுயநினைவை இழந்த சம்பவம் நடந்து உள்ளது.

சாலை பள்ளங்களால் விபத்து

பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களால் சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சாலை பள்ளங்களால் நடந்த விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் கூட சாலை பள்ளத்தால் நடந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்து இருந்தார். இந்த நிலையில் சாலை பள்ளத்தால் நடந்த விபத்தில் சிக்கி ஒரு வாலிபர் சுயநினைவை இழந்துள்ள சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப்(வயது 36). இவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். ஜாலஹள்ளி அருகே கங்கமனகுடி ரோட்டில் சந்தீப், மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலை பள்ளத்தில் சந்தீப்பின் மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதனால் சந்தீப்பின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது.

சுயநினைவை இழந்த வாலிபர்

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சந்தீப் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சந்தீப்பை மீட்டு அருகே இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சந்தீப் மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனாலும் அவர் சுயநினைவை இழந்துவிட்டார். சந்தீப்புக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜாலஹள்ளி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்