எஸ்.ஐ.தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு பாதுகாப்பு அறையிலேயே வினாத்தாள்கள் திருத்தம்-சி.ஐ.டி. போலீசார் தகவல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலேயே வினாத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.;
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலேயே வினாத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் பெங்களூரு 1-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த குற்றப்பத்திரிகை 30 போ் மீது 3,065 பக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 30 பேரில் 16 நபா்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை முறைகேடாக எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 90 நாட்கள் நிறைவு பெற இருந்ததால், முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அவர் சம்பந்தப்பட்டது தொடர்பாக கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சி.ஐ.டி போலீசார் தயாராகி வருகின்றனர்
பாதுகாப்பு அறையிலேயே...
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடா்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு நடந்திருப்பதே போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் தான் என்பதை சி.ஐ.டி. போலீசார் தெளிவாக கூறியுள்ளனர். இந்த தேர்வை எழுதியவா்களின் வினாத்தாள் பெங்களூருவில் உள்ள ஆள்சேர்ப்பு பிரிவின் பாதுகாப்பு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையின் கதவை திறந்து, தேர்வு எழுதியவர்களில் யாரெல்லாம் பணம் கொடுத்திருந்தார்களோ, அவர்களது வினாத்தாள்களை போலீசார் திருத்தி இருந்தது தெரியவந்துள்ளது.
வினாத்தாள்களை திருத்துவதற்காக பாதுகாப்பு அறை மற்றும் அதற்கு முன்பாக பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆப் செய்திருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வினாத்தாள்களை திருத்துவதற்காக ரூ.60 லட்சம் வரை வாங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பாலுக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாருக்கும் ரூ.2½ கோடி கைமாறியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதான ஸ்ரீதர் மற்றும் ஹர்ஷா வீட்டில் இருந்து ரூ.2½ கோடி சிக்கியது பற்றியும் போலீசார் தெரிவித்துள்ளனர்.