இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

அறுந்து கிடந்த மின்கம்பி மீது இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் இருக்கையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-08 15:50 GMT

கலபுரகி:

கலபுரகி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்த இடங்களில் புதிதாக மின்கம்பங்களை நடும் பணி மின்சார துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதையொட்டி நேற்று கலபுரகி டவுன் பகுதியைச் சேர்ந்த டிரைவரான பிரபுலிங்கா என்பவர் ஒரு சரக்கு ஆட்டோவில் இரும்பு மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு கலபுரகி டவுன் ஆலந்தா டவுன் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு மின்கம்பி மீது சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்டு இருந்த ஒரு மின்கம்பம் உரசியது.

அதன்மூலம் இரும்பு மின்கம்பிகள் மற்றும் ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்து பிரபுலிங்கா பரிதாபமாக சரக்கு ஆட்டோவின் இருக்கையிலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த மின்சார துறையினர் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி கலபுரகி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரபுலிங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்