மே.வங்காளம்: கைது செய்யப்பட்ட மந்திரி, உதவியாளருக்கு ஆக.3 வரை அமலாக்கத்துறை காவல்

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்காள முதல் மந்திரி மற்றும் அவரது உதவியாளருக்கு ஆகஸ்ட் 3 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மே.வங்காளம்: கைது செய்யப்பட்ட மந்திரி, உதவியாளருக்கு ஆக.3 வரை அமலாக்கத்துறை காவல்
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையில் கடந்த 23-ம் தேதி மாலை கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் மந்திரி பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடம் இருப்பதாக கூறினர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மந்திரி பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொல்கத்தா கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு மந்திரி பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.

23 -ம் தேதி கைதான பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com