பாதுகாப்பு குறித்து 'சாட்டிங்'; காதல் ஜோடியின் செயலால் விமானம் 6 மணி நேரம் தாமதம்

பாதுகாப்பு குறித்து சாட்டிங் செய்த காதல் ஜோடியால் விமானத்தை நிறுத்தி சோதனை நடத்திய சம்பவம் மங்களூரு விமான நிலையத்தில் நடந்தது.

Update: 2022-08-15 09:33 GMT

மங்களூரு,

மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று இந்த விமான நிலையத்தில் காதல் ஜோடிகள் அருகருகே அமர்ந்து செல்போனில் குறுந்தகவல் அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் விமானங்கள் புறப்படும் நேரங்கள் குறித்து பேசியப்படியே ஜாலியாக அரட்டை அடித்தபடி குறுந்தகவல் அனுப்பி சாட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த சக பயணிகளில் ஒருவர் விமான பணிப்பெண்களுக்கு தகவல் அளித்தார். விமான நிலைய பணிப்பெண்கள் உடனே விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் விமான சேவையை தடை செய்தனர். மேலும் விமான நிலைய ஊழியர்களை வரவழைத்து காதல் ஜோடிகள் பயணிக்க இருந்த விமானத்தை சோதனை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தை அதிகாரிகள் நிறுத்தி, அவசரம், அவசரமாக பயணிகள் அனைவரையும் கீழே இறங்கிவிட்டு சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் விமானத்தில் பாதுகாப்பு குளறுபடி எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து காதல் ஜோடியை விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அதில் அந்த பெண் பெங்களூரு செல்லும் விமானத்திற்கும், அந்த வாலிபர் மும்பை செல்லும் விமானத்திற்கும் காத்திருந்ததும், காதலர்களான அவர்கள் இருவரும் விமான நிலைய பாதுகாப்பு, விமான பாதுகாப்பு குறித்து விளையாட்டாக செல்போனில் மாறி மாறி குறுந்தகவல் அனுப்பி சாட்டிங் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள் பின்னர் விமான சேவையை தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்