டாக்டரைய்யா இருக்காரா...? ராணுவ மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்த யானைகளால் பரபரப்பு
மேற்கு வங்காளத்தில் ராணுவ குடியிருப்பில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் காட்டு யானைகள் நுழைந்ததில் நோயாளிகளிடையே பரபரப்பு தொற்றி கொண்டது.;
Image courtesy: Indiatoday
ஜல்பைகுரி,
சமீப காலங்களாக வனவிலங்குகள், ஊருக்குள் புகுவதும், மக்களை தாக்குவதும் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் போன்ற செய்திகள் வெளிவருவது அதிகரித்து காணப்படுகின்றன.
இதுபற்றிய பல வீடியோக்களும் வெளிவந்து அச்சமூட்டியுள்ளன. எனினும், வனப்பரப்பு குறைந்து கொண்டே செல்வதும், மக்களின் ஆக்கிரமிப்பு, வனஅழிப்பு போன்றவையும் இதன் காரணிகளாக கூறப்படுகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்த மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினர்களாக சில யானைகள் சென்று பார்வையிட்டு உள்ளன.
முதலில், ஒரு யானை குனிந்தபடி வார்டு ஒன்றுக்குள் நுழைகிறது. அதன்பின்னர், பின்னாலேயே வரும் மற்ற இரு யானைகளும் வார்டுக்குள் போகின்றன. இதனை சற்று தொலைவில் உள்ள வார்டில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் போனில் படம் பிடித்து உள்ளனர்.
இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் யானைகளை பின் தொடர்ந்து சென்று, அதனை தங்களது மொபைல் போன்களில் புகைப்படங்களாவும், வீடியோவாகவும் படம் பிடித்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை அளித்துள்ளனர். 300 பேர் வரை பல்வேறு விமர்சனங்களையும் பகிர்ந்து உள்ளனர்.
அதில் ஒருவர், கணேஷ்ஜி, நோயாளிகளுக்கு ஆசிகள் வழங்க வந்துள்ளார் என்றும் ஊசி போட வந்துள்ளனர் என்று மற்றொருவரும், காட்டு பகுதி அழிக்கப்படுவதன் எதிரொலியாக யானைகள் இதுபோன்று ஊருக்குள் வருகின்றன என்று இன்னொருவரும் தெரிவித்து உள்ளனர்.