காங்கிரசின் பஸ் யாத்திரையை தடுக்க சாத்தியமில்லை

கொரோனா பரவல் பீதி இருப்பதாக கூறி காங்கிரசின் பஸ் யாத்திரையை தடுக்க அரசால் சாத்தியமில்லை என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
காங்கிரசின் பஸ் யாத்திரையை தடுக்க சாத்தியமில்லை
Published on

பெங்களூரு:-

பெங்களூருவில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அரசால் சாத்தியமில்லை

மேகதாது பாதயாத்திரை மேற்கொண்டபோதும் கொரோனா பரவலை காரணம் காட்டி, பாதியில் பாதயாத்திரையை நிறுத்தினார்கள். கொரோனா விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது சட்டசபை தேர்தலுக்காக நானும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் பஸ் யாத்திரை செல்ல உள்ளோம்.

தற்போது இந்த பஸ் யாத்திரையை நிறுத்தும் நோக்கத்துடன் கொரோனா பரவலை அரசு கையில் எடுத்து வருகிறது. சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக மாநிலத்தின் பல பகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி பஸ் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பஸ் யாத்திரையை தடுக்க அரசால் மட்டும் இல்லை, யாராலும் சாத்தியமில்லை.

பா.ஜனதா அரசின் தோல்வி...

பஸ் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க தயாராகி விட்டனர். ராகுல்காந்தியின் நடைபயணத்தையும் தடுக்க பா.ஜனதாவினர் முயற்சிக்கிறார்கள். ராகுல்காந்திக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கை சகித்து கொள்ள பா.ஜனதாவினரால் முடியவில்லை. அதனால் தான் நடைபயணத்தை தடுக்க முயற்சிக்கின்றனர்.

தற்போது கொரோனா பரவல் பீதி இருப்பதாக கூறி மக்களை மிரட்டும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவலால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. பஸ் யாத்திரையின் போது பா.ஜனதா அரசின் தோல்வி குறித்தும், ஊழல் குறித்தும் மக்களிடம் விளக்கமாக எடுத்து கூறப்படும். இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com