பாலியல் தொல்லை புகாரில் எழுத்தாளருக்கு வழக்கப்பட்ட முன் ஜாமின் ரத்து - கேரள ஐகோர்ட்டு அதிரடி

புகார் கொடுத்தவர் பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக கூறி அவர் தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கீழமை கோர்ட்டு முன்ஜாமின் வழங்கியது.
பாலியல் தொல்லை புகாரில் எழுத்தாளருக்கு வழக்கப்பட்ட முன் ஜாமின் ரத்து - கேரள ஐகோர்ட்டு அதிரடி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக் சந்திரன். 74 வயதான சிவிக் சந்திரன் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் புத்தக கண்காட்சியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சிகிவ் சந்திரனுக்கு கடந்த 2-ம் தேதி கோர்ட்டு முன் ஜாமின் வழங்கியது .

இதனிடையே, சிவிக் சந்திரன் தன்னுக்கு கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து கடந்த 2020 பிப்ரவரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு இளம்பெண் எழுத்தாளர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் கொடுத்துள்ள பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் குற்றஞ்சாட்டப்பட்ட சிவிக் சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டு நீதிபதி கிருஷ்ண குமார் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

முன் ஜாமின் வழங்கியதற்கான உத்தரவு நகல் கடந்த 17-ம் தேதி வெளியானது. அதில், முன் ஜாமின் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தனது உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளது. உடல் ரீதியிலான தொடர்பு (Physical Contact) இருந்தது ஒப்புக்கொண்டபோதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் புகார் அளித்த பெண்ணை தனது மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்பமுடியவில்லை. ஆகையால், சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது' என கருதப்படுகிறது. இதன் மூலம் மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் பதியப்பட்ட 2-வது பாலியல் தொல்லை வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டு வழங்கிய முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் கேரள அரசு மேல் முறையீடு செய்தது.

இந்நிலையில், சிவிக் சந்திரனுக்கு கீழமை கோர்ட்டு வழங்கிய ஜாமினுக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு கேரள ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, கவுசிர் எடப்பகாதி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் வழங்கியதில் கீழமை கோர்ட்டு நீதிபதி தனது அதிகார வரம்பை சரிவர கையாளவில்லை என்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளது' என்றார்.

மேலும், சிவிக் சந்திரனுக்கு கோழிக்கோடு கீழமை கோர்ட்டு வழங்கிய முன் ஜாமினை கேரள ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதேவேளை, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடைபெறும் வரை சிவிக் சந்திரனை கைது செய்யக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com