அசாம்: அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 300 குடும்பங்கள், ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்!

அசாமில் 330 ஏக்கர் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை தொடங்கியது.

Update: 2022-09-03 08:00 GMT

கவுகாத்தி,

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் 330 ஏக்கர் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை தொடங்கியது. அந்த இடத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதால் நிலம் விடுவிக்கப்பட்டு வருகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், 50 ஜேசிபி இயந்திரங்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அசாம் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் உட்பட சுமார் 1,200 பாதுகாப்புப் பணியாளர்கள் ஆயுதங்களுடன் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஆவணங்களின்படி, 299 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றன.ஆனால் அவர்களில் 90% க்கும் அதிகமானோர் ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் பெற்று வெளியேறிவிட்டனர்.

"நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம், எங்களுக்கு வேலை இல்லை, இங்குள்ள வயல்களில் வாழ்கிறோம், நாங்கள் எங்கு செல்வோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று அங்கு வாழ்ந்து வந்த ஒரு பெண் கூறினார்.

அதிகாரிகள் கூறுகையில், "பெரும்பாலான குடும்பங்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். தற்போது, இது அரசு நிலம் என்றும், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வசித்துவந்த அனைத்து குடியிருப்பாளர்களும் ஏற்கனவே அரசு அறிவிப்பைப் பெற்ற பிறகு தங்கள் உடைமைகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அமைதியாக நடைபெறுகிறது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய பணி நீண்ட நேரமாக நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டிய பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் காலை 9 மணியுடன் பணி முடிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்