அரசு பணிகளில் எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு கேட்டு புதுவை சட்டசபையை பா.ம.க.வினர் முற்றுகை

புதுவை அரசுப் பணிகளில் எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு கோரி சட்ட சபையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் போலீசார் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-18 00:18 GMT

தனி இடஒதுக்கீடு

அரசுத் துறைகளில் முதல்கட்டமாக புதுவை 1,500 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் காவல், தீயணைப்பு, புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர் போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

பேரணி

இந்தநிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சட்டசபை நோக்கி பேரணி நடத்தப்போவதாக பா.ம.க. அறிவித்து இருந்தது. இதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பா.ம.க.வினர் புதுவை அண்ணா சிலை அருகே கூடினார்கள். அங்கிருந்து மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, மாதா கோவில் வழியாக ஆம்பூர் சாலையை நோக்கி ஊர்வலம் வந்தது.

தண்ணீர் பாட்டில் வீச்சு

ஆம்பூர் சாலை சந்திப்பு அருகே போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் ஆவேசத்துடன் வந்த பா.ம.க.வினர் அந்த தடுப்புகளை தள்ளினார்கள். அங்கு குறைந்த அளவிலேயே போலீசார் இருந்ததால் அவர்களால் தடுக்க முடியவில்லை. அதை மீறி பா.ம.க.வினர் சட்டசபை நோக்கி முன்னேறினார்கள். சிலர் போலீசார் மீது தண்ணீர் பாட்டில், கற்கள், கொடிகளை ஏந்தி வந்து குச்சிகளை வீசினார்கள். ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சட்டசபை முற்றுகை

தடுப்புகளை தாண்டி வந்த பா.ம.க.வினரை சட்டசபை அருகில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே போலீசார் மீண்டும் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். அதையும் தள்ளிவிட்டு சட்டசபையின் பிரதான நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க.வினரின் போராட்டத்தை தொடர்ந்து அந்த நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டது. அங்கேயே பா.ம.க.வினர் மிகவும் பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்ட சபையில் இல்லை.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சர் வந்ததும் அவரை சந்தித்து பேச அழைத்து செல்வதாக உறுதி யளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபைக்கு வந்தார். அவரை சந்திக்க பா.ம.க. முக்கிய பிரமுகர்களை போலீசார் அழைத்துச் சென்றனர்.

ரங்கசாமி உறுதி

அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த பா.ம.க.வினர் மிகவும் பிற் படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ரங்கசாமி, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

5 பிரிவுகளில் வழக்கு

இந்த நிலையில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி உள்பட நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்