ராஜஸ்தான்: ஆசிரியர் தாக்கியதில் தலித் சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி! ஆசிரியர் கைது

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தவறிய மாணவனை, ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான்: ஆசிரியர் தாக்கியதில் தலித் சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி! ஆசிரியர் கைது
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள அரசு பள்ளியில் ஒரு தலித் சிறுவன் படித்து வந்தான்.

7ஆம் வகுப்பில் படிக்கும் அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனை, பள்ளி ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், மயக்கமடைந்துள்ளான். உடனே மாணவன் அங்கு உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் தலைவலி இருப்பதாக கூறினான், ஆனால் பெரிய காயம் எதுவும் இல்லை. சிறுவனின் நிலை சீராக உள்ளது என்று சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. தேர்வுத் தாளை தாமதமாக சமர்ப்பித்ததற்காக அந்த ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டான் என பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து பல்வேறு தலித் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. குற்றம் சாட்டப்பட்ட அசோக் மாலி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான். 9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான்.

அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 13ஆம் தேதி அவன் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com