மத்திய பிரதேச காப்பகத்தில் 3 குழந்தைகளின் மதம், பெயர் மாற்றம்: தேசிய ஆணையம் அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் 27 இளம்பெண்கள் காணாமல் போனதும், கட்டாய விபசாரத்தில் அவர்கள் தள்ளப்படுவதும் தெரிய வந்துள்ளது.

Update: 2022-11-13 04:10 GMT


ரெய்சன்,


மத்திய பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் காப்பகம் ஒன்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ சமீபத்தில் ஆய்வுக்காக சென்றுள்ளார்.

இதன்பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த ஆய்வில் ஒரு விசயம் வெளிவந்து உள்ளது. காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் கூட மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்து உள்ளது.

அவர்களின் பெயரில் புதிய ஆவணங்கள் மற்றும் மதநம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு இருந்தன. இவற்றை காப்பகத்தினை நடத்தி வருபவர் யாரோ சிலருக்காக செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்பு அவர், ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி, விற்கும் அவலம் பற்றி தெரிய வந்து அதற்கான விசாரணைக்கு சென்றுள்ளார்.

அந்த இளம்பெண்கள் கட்டாயத்தின்பேரில் விபசாரத்தில் தள்ளப்பட்ட குற்றச்சாட்டும் உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். சென்ற இடத்தில், சிறுமிகளின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பலரையும் வீடுகளில் காணவில்லை. அவர்களும் விபசாரத்தில் தள்ளப்பட்டு இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதன்படி, அந்த கிராமத்தில் இருந்த 27 இளம்பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது என அவர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு இந்த கிராமத்தில் பெரிய அளவில், கும்பலாக பெண்களை விபசாரத்திற்கு விற்கும் அவலங்கள் நடந்தது தெரிய வந்துள்ளது என்றும் பிரியங் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்