கேரளாவில் 8 இடங்களில் தங்கியிருந்த ஷாரிக்; என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

கேரளாவில் 8 இடங்களில் ஷாரிக் தங்கியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-07 18:45 GMT

பெங்களூரு:

மங்களூரு குண்டுவெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஷாரிக் பலத்த காயம் அடைந்தார். அவர் பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதர் முல்லர் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையிலான போலீசார், ஷாரிக்கிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள், மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களும் ஷாரிக்கிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று கொண்டனர்.

கொச்சியில் தங்கிய ஷாரிக்

பயங்கரவாதி ஷாரிக் பற்றி தினந்தோறும் புதிய, புதிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஷாரிக் குடகில் உள்ள ஒரு ரெசார்ட்டில் 2 இளம்பெண்களுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் அவருடன் தங்கி இருந்த 2 பெண்கள் யார் என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷாரிக், கேரள மாநிலம் கொச்சியில் 8 இடங்களில் தங்கி இருந்தது என்.ஐ.எ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு ஒவ்வொரு இடத்திலும் அவர் 2 முதல் 4 நாட்கள் வரை தங்கி இருந்துள்ளார்.

அதாவது, ஆலுவா ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதி, எர்ணாகுளத்தில் உள்ள விடுதி, வடக்கு ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதி உள்ளிட்ட 8 இடங்களில் தங்கி உள்ளார்.

பயங்கரவாத செயலுக்கு பணம் வசூல்

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சிக்கு சென்று ஷாரிக் தங்கியிருந்த விடுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஷாரிக் கொச்சியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த வீட்டு முகவரிக்கு பல பார்சல்கள் வந்துள்ளன. அந்த பார்சல்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். மேலும் ஷாரிக் அங்கு பலரை சந்தித்து பேசி உள்ளார்.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கை சந்தித்த நபர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஷாரிக் கொச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கிருந்த வீட்டில் இருந்து வந்த பிறகும், அவருக்கு பார்சல்கள் வந்துள்ளன. இதுபற்றி குடியிருப்பு உரிமையாளர் ஷாரிக்கிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கொச்சிக்கு சென்று அந்த பார்சல்களை வாங்கி வந்துள்ளார். அந்த குடியிருப்பு உரிமையாளரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர்.

ஷாரிக், பயங்கரவாத செயல்களுக்கு பணம் வசூலிக்கும் நோக்கில் பலமுறை கொச்சிக்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கிற்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்