சாகர் அருகே பாக்கு மூட்டைகளை திருடிய்; 3 பேர் கைது

சாகர் அருகே பாக்குமூட்டைகளை திருடிய வழக்கில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.17 கோடி மதிப்பிலான பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 18:45 GMT

சிவமொக்கா-

பாக்குமூட்டைகள் திருட்டு

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா பசலகோடு கிராமத்தை சேர்ந்தவர் மதுகர். பாக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 25,500 கிலோ பாக்கை 350 மூட்டைகளில் அகமதாபாத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். பாக்கு மூட்டைகளை பத்ராவதியை சேர்ந்த தோலாராம் என்பவர் கொண்டு சென்றார். ஆனால் இந்த பாக்குமூட்டை குறிபிட்ட இடத்திற்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து மதுகருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுகர் சாகர் புறநகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். இதற்கிடையில் அதே குடோனில் வேலை பார்த்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் மாயமாகி இருந்தனர். இதனால் அவர்கள் தான் பாக்குமூட்டைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரஷாக் கான் (வயது 65), கட்டிபிலோத் மாவட்டத்தை சேர்ந்த தேஜூசிங் (42), அனீஸ் அப்பாசி (55) என்று தெரியவந்தது.

ரூ.1.17 கோடி பாக்கு பறிமுதல்

இவர்களிடம் இருந்து பாக்குமூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பாக்கு மூட்டைகள் சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் பார்வையிட்டார். அப்போது நிருபர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டம் சாகரில் பதிவான பாக்குமூட்டை திருட்டு வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசா் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தினகரிடம் வேலை பார்த்து வந்தவர்கள் ஆவர். அவர்கள் திட்டமிட்டு பாக்கு மூட்டைகளை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் சாரங்கப்பூர் பகுதியில் பாக்கு மூட்டைகளை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. சாரங்கப்பூர் போலீசார் உதவியுடன் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.17 கோடி மதிப்பிலான பாக்குமூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்