இமாச்சலபிரதேச தேர்தல்: 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத வாக்குகள் பதிவு

இமாச்சலபிரதேசதில் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-12 09:52 GMT

Image Courtesy: PTI

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர். பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் என பா.ஜனதாவின் முன்னணி தலைவர்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் மாநிலத்தில் உச்சகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். இவ்வாறு கடந்த சில வாரங்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் (செராஜ்), மாநில காங்கிரஸ் தலைவர் அக்னிஹோத்ரி (ஹரோலி), முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் (சிம்லா ஊரகம்) உள்ளனர். சிம்லா சட்டசபை தொகுதியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 5.30 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதன்படி, பிலாஸ்பூரில் 34.05 சதவீதமும், சம்பாவில் 28.35 சதவீதமும், ஹமிர்பூரில் 35.86 சதவீதமும், காங்க்ராவில் 35.50 சதவீதமும், கின்னூரில் 35.00 சதவீதமும், மண்டியில் 41.17 சதவீதமும், சிம்லாவில் 30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதே போல், சோலன் 37.90 சதவீதம், குலு 40.33 மற்றும் உனாவில் 39.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று (சனிக்கிழமை) பதிவாகிற வாக்குகள், அடுத்த மாதம் 8-ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்