கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இரட்டைவேடம் - ரஷிய தூதர்

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகள் இரட்டைவேடம் போடுவதாக ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

பொதுவாக இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில்லை. ஆனால் ரஷிய-உக்ரைன் போரால் ரஷிய இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. இந்த கச்சா எண்ணெய், தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் செயலை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.

இந்தச் சூழலில் இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ரஷிய இறக்குமதிக்கான தங்களின் முறைகேடான தடையில் இருந்து தங்களுக்கு தாங்களே விலக்கு அளித்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மேற்கத்திய நாடுகள், அதுகுறித்து கபட மவுனம் சாதிக்கின்றன. அதேவேளையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை விமர்சித்து வருகின்றன. இது அந்நாடுகளின் இரட்டை வேடத்தை, இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

தங்களின் சொந்தக் குரலை இழந்து, அமெரிக்காவுக்கு ஏற்ப ஆடும் மேற்கத்திய நாடுகளின் செயலால் உலகளவில் எரிசக்தி விலை உயர்ந்திருக்கிறது. அதற்காக இந்தியா ஏன் விலை கொடுக்க வேண்டும்?

ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடையைத் தாண்டி இந்திய-ரஷியா வர்த்தகம் வெகுவாக வளர்ந்துவருகிறது. இரு நாடுகளும் இன்னும் பரஸ்பர வர்த்தகத்தை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளன.

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் சீரான நிலையை ரஷியா மதிக்கிறது என்று அவர் கூறினார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை விமர்சிக்காத இந்தியா, இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com