முதல் மந்திரி மாற்றப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை: பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் முதல்-மந்திரியை மாற்றும் விவகாரம் தொடர்பாக பசவராஜ் பொம்மையை, ஜே.பி.நட்டா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

Update: 2022-08-11 15:17 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல்கள் பரவி வந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட தனது டுவிட்டரில் முதல்-மந்திரி மாற்றம் குறித்து கருத்து வெளியிட்டு இருந்தது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முதல்-மந்திரி மாற்றப்படுவதாக தகவல் பரவியதால் பசவராஜ் பொம்மையும் கடும் அதிருப்தி அடைந்தார். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து தனது நெருங்கிய மந்திரிகளிடம் அவர் கட்சி மேலிடம் மற்றும் பிற தலைவர்கள் மீது அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. அதாவது முதல்-மந்திரியை மாற்றுவதாக கூறினால், என்னால் எப்படி தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், முதல்-மந்திரி மாற்றம் விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்ததுடன், காங்கிரஸ் கட்சியும் டுவிட்டர் பதிவு வெளியிட்ட விவகாரம் பா.ஜனதா மேலிடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேற்று இரவு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதாவது முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பசவராஜ் பொம்மையுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது உங்கள் மீது பா.ஜனதா மேலிடத்திற்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களை மாற்றும் எண்ணம் கட்சிக்கு இல்லை. உங்களது தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர் கொள்ளப்படும். நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். அரசு மற்றும் கட்சியை பலப்படுத்தி அடுத்த சட்டசபை தேர்தலை எதிர் கொள்ள தயாராவதுடன், பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபடும்படி ஜே.பி.நட்டா கூறியுள்ளார். இதன் காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உற்சாகம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக முதல் முறையாக தனது கருத்தை பதிவிட்டுள்ள பசவராஜ் பொம்மை, முதல் மந்திரி மாற்றப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தனது அரசாங்கம் வலுவாக உள்ளது. தொடர்ந்து அப்படியே இருக்கும். மாநிலத்திற்காகவும் பாஜகவுக்கும் இன்னும் கடுமையாக உழைப்பேன்"என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்