கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்க இளம்பெண்கள் சிலருடன் படுக்கவேண்டும்; காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கார்கேவை கடுமையாக சாடியதோடு, இத்தகைய இழிவான கருத்துக்களுக்காக அவரைக் கண்டிக்க வேண்டும் என்று காங்கிரசிடம் கேட்டுக் கொண்டார்.

Update: 2022-08-13 16:43 GMT

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, "இளம்பெண்கள் அரசு பதவிகள் கிடைக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் எவரேனும் சிலரது படுக்கையில் உடன் படுக்க வேண்டும்.ஆண்கள் என்றால் அரசு பதவிகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டும்" என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கார்கேவை கடுமையாக சாடியதோடு, இத்தகைய இழிவான கருத்துக்களுக்காக அவரைக் கண்டிக்க வேண்டும் என்று காங்கிரசிடம் கேட்டுக் கொண்டார்.

சம்பித் பத்ரா கூறியதாவது, "அவர் கூறியது கண்டிக்கத்தக்கது.இது பெண்களுக்கு எதிரான பொதுமைப்படுத்தல். மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பெண்களுக்கு எதிராக மிகவும் பயங்கரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் அவரை விசாரிக்க வேண்டும். அவரை சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா தவிர வேறு யாரால் கண்டிக்க முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், "ஆயிரக்கணக்கான பெண்கள், திறமையானவர்கள், படித்தவர்கள், கடினமாக உழைத்து, பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை பெறுகிறார்கள்.

பிரியங்க் கார்கே, உங்களின் இந்த வார்த்தைகளால், பல பெண்கள் அவமதிக்கப்படவில்லையா? உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்" என்று கர்நாடக பாஜக டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது.

முன்னதாக, பிரியங் கார்கே பேசியதாவது, "கர்நாடகத்தில் மந்திரி ஒருவர், அரசு வேலைக்கு இளம்பெண் ஒருவரை தன்னுடன் படுக்கும்படி கூறியுள்ளார். ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததும், அவர் பதவியில் இருந்து விலகி விட்டார். நான் கூறியதற்கு இதுவே சான்று என கூறினார்.

கர்நாடகத்தில் பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால், பணி நியமன ஊழல்களை விசாரிக்க நீதிமன்ற விசாரணை அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.அரசு, விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இதேபோன்று, கர்நாடகாவின் மின்பரிமாற்ற கழகத்தில் நடந்த 1,429 பதவிகளுக்கான நியமனத்தில் மொத்தம் 600 பதவிகளுக்கு டீல் பேசப்பட்டு உள்ளன. உதவி பொறியாளர் பணிக்கு ரூ.50 லட்சம், இளநிலை பொறியாளர் பணிக்கு ரூ.30 லட்சம் பணம் பெற்றுள்ளனர். இதில், ரூ.300 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.

இதுபோன்று ஒவ்வொரு பதவிக்கான தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றால், ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகள் என்ன செய்வார்கள்? ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோதும், தங்களை எதுவும் செய்ய முடியாது என சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு நன்றாக தெரியும்.

இதனால், கர்நாடக மின்பரிமாற்ற கழக பதவிகளுக்காக விண்ணப்பித்திருந்த 3 லட்சம் மாணவர்களின் வருங்காலத்துடன் அரசு விளையாடி கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்