100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

100 நாள்வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
Published on

100 நாள்வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயம் அழிந்துவிடும்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. 56 விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ஆம்பூர், வாணியம்பாடி பாலாற்று பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை கழிவுநீரை மழைக்காலங்களில் ஆற்றில் விடுகின்றனர். இதனால் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிந்து விடும் நிலைக்கு செல்கிறது. எனவே 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகள் சார்பில் 50 சதவீத கூலியும், அரசு 50 சதவீத கூலியும் வழங்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தை காக்க முடியும்.

ஜலகாம்பாறைக்கு செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 14 வேகத்தடைகள் உள்ளது. அதனை அகற்ற வேண்டும். ஆடிபட்டத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் கிடைக்கவும், யூரியா உரம் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

கண்காணிக்கப்படும்

ஆற்றில் கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் தோல்தொழிற்சாலைகள் கூடுதலாக கண்காணிக்கப்படும். 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்து அரசுக்கு பரிந்துரை அளிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 2,394 குக்கிராமங்கள் உள்ளன. சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு கரும்பு அனுப்பியுள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்திற்குள் அதற்குண்டான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு 263 ஹெக்டேர் இருக்கிறது. இதில் 120 ஹெக்டேர் நிலத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், துணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com