கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி பெயரில், வாட்ஸ்-அப் குழு அமைத்து ஆட்களை சேர்த்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரைபோலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-19 16:45 GMT

வாட்ஸ்-அப் மூலம் ஆட்கள் திரட்டல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமாக இறந்தார். இதையடுத்து ஏராளமானோர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது கலவரம் உருவாகி பள்ளி சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 350-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் ஆட்களை திரட்டி போராட்டம் நடத்தியது தெரியவந்தது. இதனால் போராட்டத்துக்கு அதிக அளவில் ஆட்கள் வருவது போலீசாரால் முன்கூட்டியே தெரியாமல் போனதால் கலவரத்தை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிற மாவட்டங்களில் போராட்டங்களுக்கு ஆட்களை திரட்டாத வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பெயரில், திண்டுக்கல்லில் வாட்ஸ்-அப் குழு தொடங்கி உறுப்பினர்களை சேர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர்.

அதில் வேடசந்தூர் லட்சுமணம்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் உதயகுமார் (வயது 20), திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் வாட்ஸ்-அப் குழு தொடங்கி 350 பேரை உறுப்பினர்களாக சேர்த்தது தெரியவந்தது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மில் தொழிலாளி

இதேபோல் மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவாக, வேடசந்தூர் பகுதியில் வாட்ஸ்-அப் குழு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டனர். இந்த குழுவில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்த தனியார் மில் தொழிலாளி செல்வமணிகண்டன் (25) என்பவர் வாட்ஸ்-அப் குழு அமைத்து அதில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களை சேர்த்து ஒருங்கிணைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பாஸ்கரன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் வாட்ஸ்-அப் குழு தொடங்கி சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் வாலிபர்களை ஒருங்கிணைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமணிகண்டனை நேற்று கைது செய்தனர்.

பழனி

இதேபோல் பழனி அடிவாரம் சன்னதி வீதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கோகுல் (23), வாட்ஸ்-அப் குழு அமைத்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரை, பழனி டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்