

ஊட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கிளை சங்கமான நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அறிமுக விழா ஊட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவா பரமேஸ்வரண் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரகீம் வரவேற்றார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளை மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, துணைத் தலைவர் தோமஸ், கோவை மண்டல தலைவர் சந்திரசேகர் ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினர். கூட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி கடைகளுக்கு உயர்த்திய வாடகையை குறைப்பது, சொத்து வரியை குறைப்பது, கல்லட்டி மலைப்பாதையில் நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது, குன்னூரில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, கூடலூரில் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவது, அங்கு கதவு எண் உள்ள வீடு, கடைகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குவது, அப்பர் பவானியை சுற்றுலா தலமாக அறிவிப்பது, கோத்தகிரியில் அய்யப்பன் கோவில் அருகில் உள்ள உழவர் சந்தையை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.