

சர்வதேச அளவில் 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் விழிப்புணர்வு வாகனம் இயக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிக்கூடத்தின் சார்பில் ஒரு பஸ்சில் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு படங்கள் ஒட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் இயக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். பின்னர் கொடி அசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.