

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என திருவாரூரில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பேசியதாவது:-
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தமிழ்நாடு மகளிர் ஆணையமானது பெண்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் தொல்லைகள், குழந்தை திருமணங்கள் ஆகியவற்றை தடுக்கும் விதமாக பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 294 புகார் மனுக்கள் பெறப்பட்டு 234 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 60 மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.