தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

பூட்டிக்கிடக்கும் நூலகம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாப்பாளையம் மெயின் ரோட்டில் அப்பகுதி வாசகர்களின் நலன் கருதி நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்திற்குள் பல்வேறு வகையான நூல்கள் உள்ளன. தினசரி நாளிதழ்களும் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நூலகத்திற்கு நூலகர் இல்லாததால் நூலகத்தை பல ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளனர். இதனால் நன்மை பயக்கும் நூல்கள் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. வாசகர்களும் நாளிதழ்கள் மற்றும் நூல்களை படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மரவாப்பாளையம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து புகழூர் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தற்போது தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தார் சாலை வழியாக அரசு டவுன் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் நிலை தடுமாறி செல்கின்றனர். இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பெரியகாலத்துப்பட்டி விநாயகர் கோவில் முன்பு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரியகாலத்துப்பட்டி.

சுத்தம் செய்யப்படாத இரட்டை வாய்க்கால்

கரூர் ரத்தினம் சாலையில் உள்ள இரட்டை வாய்க்காலில் பிளாஸ்டிக், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரட்டை வாய்க்காலை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் தெரு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் நீலமேகப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்த போது இந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இங்கே மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. தினந்தோறும் இப்பகுதி வழியாக பள்ளிகளுக்கு வேன்களிலும், மோட்டார் சைக்கிளிலும் பள்ளி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். அதுபோல பொதுமக்கள் பலரும் இந்த சாலை வழியாக தினசரி பயணித்து வருகின்றனர். இப்பகுதியில் வேகத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது. எனவே உடனடியாக அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குளித்தலை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com