

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தரிசுநிலம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 120 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது தேர்வு செய்யப்பட்டு உள்ள 120 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து அவற்றில் தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது ஆகும்.
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற தேவையான நீர்வள ஆதாரங்களான ஆழ்துளைக்கிணறு அமைத்து நுண்ணீர் பாசனவசதி ஏற்படுத்தி மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இணையலாம்
இந்த திட்டத்தில் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு விவசாயிகள் தங்களது செல்போனில் உழவன் செயலி மூலம் தாங்களாகவும் பதிவு செய்து திட்டத்தில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்த விவரங்களை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர்கள் தொகுப்பு தரிசு நிலத்தை நேரில் பார்வையிட்டு சரி பார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆழ்துளைக் கிணறுகள் அல்லது குழாய்க் கிணறுகள் அமைத்துத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இந்த துறையின் நலத்திட்டங்களில் பயனடைய விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme-register என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இணையலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொண்டு திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.