வேலைக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்ததால்: தபால் அதிகாரியை கூலிப்படை வைத்து வெட்டிய வக்கீல் கணவர் கைது

வேலைக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்த தபால் அதிகாரியை கூலிப்படை வைத்து வெட்டிய வக்கீல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-08 09:50 GMT

மணலி மூலசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 56). திருவொற்றியூர் தபால் நிலைய அதிகாரியான இவர், கடந்த 27-ந் தேதியன்று மணலி விரைவு சாலை எம்.எப்.எல் ரவுண்டானா அருகே வந்த போது காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

இதில், காயமடைந்த அவரை மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து, சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், தபால்நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியரான சுகன்யா என்பவர், தாமதமாக பணிக்கு வந்ததை அசோகன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் தனது கணவரிடம், தபால் நிலைய அதிகாரி அடிக்கடி தன்னை கண்டிப்பதாகவும், அவரை எதாவது செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரது கணவர் 4 பேருடன் சேர்ந்து தபால் நிலைய அதிகாரியை வெட்டி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இந்நிலையில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சுகன்யாவின் கணவரான மீஞ்சூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த வக்கீல் சுதாகர் (வயது 37), செந்தில் குமார் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்