

நீடாமங்கலம்:
நெற்பயிரில் சேதத்தை குறைக்க வயல்களில், பறவை தாங்கி அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பறவை தாங்கி
நெல்வயலில் பறவை தாங்கி வைப்பதன் மூலம் பறவைகள் வந்து அமருவதற்கு ஏதுவாக இருப்பதால் அதில் அமரும் பறவைகள் நெற்பயிரில் தென்படும் பூச்சிகளின் பருவங்களான புழு மற்றும் கூட்டுப் புழு ஆகியவற்றை உண்டு பயிரின் சேதாரத்தை குறைக்கும். குறிப்பாக கரிச்சான் குருவி, காகம் மற்றும் ஆந்தை போன்ற பறவைகள் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு அழிக்கின்றன.பறவை தாங்கிகளுக்கு செலவழிக்க வேண்டியதே இல்லை. வயல்வெளிகளில் உள்ள குச்சிகளை 'டி' வடிவத்தில் கட்டி வைக்கலாம். அல்லது தென்னை மட்டைகளின் அடிப்பாகத்தை நேரடியாக வயல்வெளிகளில் நட்டு வைக்கலாம்.பறவை தாங்கி வைத்தும் சில இடங்களில் பறவைகளின் நடமாட்டம் குறைவாக கூட இருக்கலாம். அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை உபயோகிப்பதே இதற்கு மிக முக்கிய காரணமாகும். முடிந்தவரை ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை உத்திகளை கடைபிடிக்க வேண்டும்.
கதிர் வரும் தருவாயில்...
பறவைகள் அமர்ந்து பூச்சிகளை பிடிக்கும்பாது ஒரு சில சமயத்தில் அதன் எச்சம் நமது பயிருக்கு உரமாக பயன்படுகிறது. இந்த பறவைத் தாங்கிகளை நெற்பயிரில் கதிர் வரும் தருவாயில் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் பயிருக்கு பொருளாதார சேதத்தை விளைவிக்கும்.மேலும் நெற்பயிரை தாக்கக்கூடிய எலிகளையும், ஆந்தைகள் பிடித்து உண்ணும். பறவை தாங்கி வைப்பதனால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல பறவை தாங்கிகளை தங்களது வயல்களிலும் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.