நீலகிரியில் தொடர் மழை: பேரிடர் மேலாண்மை ஆய்வு கூட்டம்
நீலகிரியில் தொடர் மழை பெய்வதால் கூடலூரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
கூடலூர்
நீலகிரியில் தொடர் மழை பெய்வதால் கூடலூரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதில் கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அரசுத்துறை அலுவலர்களுடன் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆய்வு கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ், கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் பெய்வது வழக்கம், ஆனால் தாமதமாக தொடங்கியுள்ளது. கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை எப்போதும் அதிகமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் அதிகமாக பெய்கிறது. பருவ மழையை எதிர்கொள்வது வருவாய், தீயணைப்பு, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம், நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும்.
முன்னேற்பாடு பணிகள்
பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையினர் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அள்ளூர் வயல் ஆதிவாசி கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டை அமைச்சர் பார்வையிட்டார்.
அபாய மரங்கள்
இதேபோல் தூக்கு பாலம் பகுதியில் அபாய மரங்கள் வெட்டும் பணியை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். தொடர்ந்து நடுவட்டம் டி.ஆர் பஜார் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆர்.டி.ஓ.க்கள் முகமது குதரதுல்லா (கூடலூர்), துரைசாமி (ஊட்டி), பூஷண குமார் (குன்னூர்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, கூடலூர் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.