முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை அமல்படுத்த எதிர்ப்பு: பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கம்பத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்;

Update:2022-07-18 19:21 IST

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரையின் பேரில் ரூல் கர்வ் விதிபடி கடந்த 10-ந்தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 136 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம். நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 135.40 அடியாக உயர்ந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்ட இருப்பதால் கேரள பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்ைக விடுக்கப்பட்டது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதி நடைமுறையை அமல்படுத்த கூடாது, அணையில் நிர்ணயிக்கப்பட்ட 142 அடி வரை நீரை தேக்க வேண்டும் என கூறி நேற்று கம்பம் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பெரியாறு அணை சிறப்பு கோட்ட அலுவலகத்தை பெரியாறு பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், நிர்வாகிகள் பொன்.காட்சிகண்ணன், சலேத்து, தாமஸ், தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் துணைக்குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்