சிவகாசி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கணபதி மனைவி மீனாட்சி (வயது 54). இவர் தனது உறவினர்களுடன் சாத்தூர் அருகே உள்ள ஓடைப்பட்டி விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு கோவில்பட்டிக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், மீனாட்சி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மீனாட்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மீனாட்சியின் கணவர் கணபதி சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.