நாட்டின் மேம்பாட்டுக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம்

நாட்டின் மேம்பாட்டுக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அவசியம் என்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாட்டின் மேம்பாட்டுக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியம்
Published on

நாகர்கோவில்:

நாட்டின் மேம்பாட்டுக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அவசியம் என்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

பேரணி

குமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பெருகிவரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளானது சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு ஏற்ற வயது, முதல் குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் தேவையான இடைவெளி, தாய்மார்களின் உடல்நலத்தை பாதுகாத்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றை மையப் பொருளாக வைத்து நடைபெற்று வருகிறது.

நாட்டின் மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்வுக்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம். எனவே, அது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக கலை மாமணி பழனியாபிள்ளை குழுவினரின் சிலம்பாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விளம்பர பதாகைகள் வெளியிடப்பட்டன. மஞ்சப்பை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் உலக மக்கள் தொகை உறுதிமொழியை கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது டதி பள்ளி சந்திப்பு வழியாக சென்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் முடிந்தது. பின்னர் அங்கு கருத்தரங்கு நடந்தது. பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடந்து வந்தனர். இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பிரின்ஸ் பயஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குனர் பிரகலாதன், துணை இயக்குனர்கள் ராம்குமார், சுபேர் ஹாசன், கிரிஜா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல் காதர், ரமேஷ், புள்ளியியல் உதவியாளர் ராமச்சந்திர கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com