கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்கு தடை

கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர் அங்கு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-21 22:07 GMT

கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர் அங்கு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோவில் நிலத்தில் ஆஸ்பத்திரி

மதுரையை சேர்ந்த மாதவன், சோனைமுத்து, தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலாகும். இந்த கோவில் அருகிலேயே அதற்கு சொந்தமான நிலமும் உள்ளது.

இந்த நிலத்தை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஒரு தரப்பினர் ஆக்கிரமித்தனர். இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அந்த சொத்துகள் கோவிலுக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள கோவில் ஊருணியை ஆக்கிரமித்து அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே குருநாதசுவாமி கோவில் நிலத்தில் கட்டப்பட்டு வரும் ஆஸ்பத்திரி கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

கலெக்டர், கமிஷனர் ஆஜர்

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்கள்.

அப்போது நீதிபதிகள், கோவில் நிலத்தில் எதன் அடிப்படையில் மாநகராட்சி சார்பில் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்படுகிறது? இந்த இடம், கோவிலுக்கு சொந்தமான ஊருணி என்று வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. இந்த விவகாரத்தில் சிவில் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது ஏன்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

கட்டிடத்துக்கு தடை

அதற்கு மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தரப்பில் ஆஜரான வக்கீல், அந்த இடம் கிராம பதிவேட்டில் அரசு புறம்போக்கு நிலம் என உள்ளது என்றார்.

விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் சிவில் கோர்ட்டு உத்தரவின்படி அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சிவில் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்