தேவாலாவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தார் கலவை மையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தேவாலாவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் தனியார் தார் கலவை மையம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தார் கலவை மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேவாலா சுற்றுவட்டார பகுதி மக்கள் தார் கலவை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பகுதியில் இருந்து கலவை மையத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவாலா பஜாரில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.