ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் திருட்டு

காட்பாடியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் திருட்டு
Published on

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

காட்பாடி ஏரிமுனை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சுகுமார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சத்திய ஜீவகுமாரி. இவர் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை சுகுமார் வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு அழைத்து சென்றார். அங்கு பள்ளியில் அவரை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை, பணம் திருட்டு

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சுகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம ஆசாமிகள் சுகுமாரின் வழக்கமான நடவடிக்கையை நோட்டமிட்டு அவர் வெளியே சென்ற போது நகை, பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com