கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
மேலப்பாளையம் அருகே கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
மேலப்பாளையம்:
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலை முடிந்து மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம மனிதர்கள் இவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த குணசேகரனை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் இந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மேலப்பாளையம் கருங்குளம், மருதம்நகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.