சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கக்கோரிமேட்டூர் அனல்மின் நிலையத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கக்கோரிமேட்டூர் அனல்மின் நிலையத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

Update: 2023-07-05 20:10 GMT

மேட்டூர்

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கக்கோரி மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம் ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

மேட்டூர் அருகே புதுசின்னக்காவூர் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் புகை மற்றும் நிலக்கரி துகள்களால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பொதுமக்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக அந்த பகுதி மக்கள் அனல்மின் நிலைய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர்.

ஆனால் அதுகுறித்து அனல்மின் நிலைய நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் நேற்று காலை மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் வந்தனர்

இந்த போராட்டத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் பணிக்கு செல்ல வேண்டிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் அனல் மின் நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது. அனல்மின் நிலையத்தில் உள்ளே இருந்து வெளியே வருபவர்கள், வெளியே வர முடியாத நிலை இருந்தது.

தகவல் அறிந்த சதாசிவம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். தாசில்தார் முத்துராஜா மற்றும் அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர்கள் ராமசந்திரன், செந்தில்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி நிர்வாக என்ஜினீயர் அக்பர், கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சமரச பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.வுடன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மேட்டூர் நகர பாமக செயலாளர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது, கிராம மக்களின் கோரிக்கை குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் மேட்டூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்