10 இடங்களில் பொதுமக்களே இயக்கும் ஸ்மார்ட் சிக்னல்
கோவை மாநகரில் சாலையை கடக்க வசதியாக பொதுமக்களே இயக்கும் வகையில் 10 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப் பட உள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.;
போக்குவரத்து நெருக்கடி
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அதன்படி வாகனங்கள் சிக்னல்களில் நிற்காமல் சிறிது தூரம் சென்று 'யு டர்ன்' எடுத்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளனர்.இதனால் சிக்னல்கள் நிறுத்தப்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்கள் சாலையை கடக்க வசதியாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
அதையும் எளிமைப்படுத்தி பொதுமக்களே இயக்கும் வகையில் காந்திபுரத்தில் சோதனை முறையாக ஸ்மார்ட் சிக்னல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது. எனவே மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் சிக்னல்
இது குறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காந்திபுரத்தில் அமைத்த ஸ்மார்ட் சிக்னல் மக்களுக்கு பயன் அளிக்கிறது. எனவே கோவை- அவினாசி ரோடு, திருச்சி ரோடு உள்பட 10 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
அந்த சிக்னல் பொத்தனை பொதுமக்கள் அழுத்தி னால் 25 வினாடிகளுக்கு சிகப்பு விளக்கு எரியும்.
உடனே அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் பொதுமக்கள் சாலையை கடக்கலாம். பொதுமக்கள் ஒருமுறை பொத்தனை அழுத்தினால் 120 வினாடிகள் கழித்தே மறுபடியும் பொத்தானை அழுத்த முடியும்.
அபராதத்தொகை வசூல்
கோவை- அவினாசி ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கேமராக்கள் பதிவு செய்ய ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதை வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் செலுத்தி விடுகின்றனர்.
ஆனால் 80 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள் அபராதத்தை செலுத்துவது இல்லை. அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அபராதம் செலுத்த வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டிற்கு சென்று அபராத தொகைக்கான ரசீது வழங்கி பணத்தை வசூலிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. இந்த பணியில் ஊர்க்காவலர்களை ஈடுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.